மேலும்

சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் கடற்படைத் தளங்களை அமைக்கிறது சீனா

chinese-navyஅடுத்த 10 ஆண்டுகளுக்குள், பல்வேறு நாடுகளில் 18 கடற்படைத் தளங்களை அமைப்பதற்குச் சீனா திட்டமிட்டுள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி நமீபிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பக்கத்தில் அம்பாந்தோட்டை உள்ளிட்ட மூன்று இடங்களில், சீனக் கடற்படைத் தளம் அமையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நமீபிய நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில்,

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் வல்விஸ் குடாவில் சீனக் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பது குறித்து உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நமீபியாவில் உள்ள வல்விஸ் குடாவும், சீனக் கடற்படைத் தளங்கள் அமைக்கப்படவுள்ள 18 இடங்களில் ஒன்று என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுதவிர, இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பக்கத்தில். பாகிஸ்தான், சிறிலங்கா, மியான்மார் ஆகிய நாடுகளிலும், இந்தியப் பெருங்கடலின் மேற்குப் புறத்தில் டிஜிபோட்டி, யேமென், ஓமான், தன்சானியா, மற்றும் மொசாம்பிக்  ஆகிய நாடுகளிலும், மத்தியதெற்கு இந்தியப் பெருங்கடலில் செஷெல்ஸ் மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளிலும் சீனக் கடற்படைத் தளங்கள் அமைக்கப்படவுள்ளன.

அனைத்துலக கடற்பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்த மூன்று கேந்திர கோடுகளிலும், சீனா காத்திரமான பொறுப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவுள்ளது.

வடகொரியாவின் சொங்ஜின் துறைமுகம், பபுவா நியூகினியாவின் மொரெஸ்பி துறைமுகம், கம்போடியாவின் சிஹானுக்வில்லி துறைமுகம். தாய்லாந்தின், கோலன்ரா துறைமுகம், மியான்மாரின் சிட்வே துறைமுகம், பங்களாதேசின் டாக்கா துறைமுகம், பாகிஸ்தானின் குவதார் துறைமுகம்,  சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகம், மாலைதீவு, செஷெல்ஸ், டிஜிபோட்டியின் டிஜிபோட்டி துறைமுகம், நைஜீரியாவின் லாகோஸ்துறைமுகம். கென்யாவின் மொம்பாசா துறைமுகம், தன்சானியாவின் தர் இஸ் சலாம் துறைமகம், அங்கோலாவின் லுவாண்டா துறைமுகம் ஆகியனவே சீனக்கடற்படைத் தளங்கள் அமையவுள்ள இடங்களாகும்.

military-base

இதுகுறித்து, தி நமீபியன் நாளிதழுக்கு, நமீபிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் லெப்.கேணல் மோனிகா ஷேயா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி உயர்மட்டத்தில் பேச்சுக்கள் நடக்கின்றன.  அதை மட்டுமே இப்போது என்னால் கூற முடியும்.

இதுபற்றிய முடிவு எடுக்கப்பட்டதும், நிச்சயமான நாட்டுக்கு அறிவிப்போம். இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சீனா,  நட்புரீதியான கலந்துரையாடல்களின் மூலம், பரஸ்பரம் நன்மையளிக்கத்தக்க எரிபொருள் நிரப்பும், தரித்து நிற்கும் தளங்களையும், பராமரிப்பு நிலையங்களையும் வெளிநாடுகளில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க படைத்தளங்களைப் போல சீன கடற்படை தளங்களை அமைக்காது.

ஆனால், அனைத்துலக நடைமுறைகளுக்கேற்ப, வெளிநாட்டு மூலோபாய ஆதரவுத் தளங்களை உருவாக்காமல் இனிமேலும் இருக்க முடியாது.

நமீபியாவில் சீனா பல பிரதான உட்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதிலும், வளங்களைப் பகிர்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

ஒரு செய்மதி வழிகாட்டல் நிலையத்தையும், ஸ்வாகோப்முண்ட் என்ற இடத்தில் அமைத்துள்ளது என்பதையும் நமீபிய நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *