மேலும்

சிறிலங்காவுக்கு படையெடுக்கவுள்ள இந்திய பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள்

AJIT-KUMAR-DOVALஇந்திய பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட  குழுக்கள் அடுத்தடுத்த வாரங்களில் சிறிலங்காவுக்கான பயணங்களை மேற்கொள்ளவுள்ளன.

அடுத்த வாரமும், அடுத்த மாதம் முதலாம் வாரமும், சிறிலங்காவில் இரண்டு பாதுகாப்புக் கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளின் மாநாடு வரும் 27ம் ,28ம் நாள்களில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்தப் பாதுகாப்பு மாநாட்டில், எட்டு தெற்காசிய நாடுகள் மற்றும், பத்து தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ரஸ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனரோலி அன்ரனோவ் தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவும், சீனாவில் இருந்து உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும் இந்த மாநாட்டில் பார்வையாளர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில், இந்திய விமானப்படைத் தளபதி எயர்சீவ் மார்சல் அரூப் ராஹா தலைமையிலான உயர்மட்ட படை அதிகாரிகள் குழு பங்கேற்கவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில், எயர் சீவ் மார்சல் அரூப் ராஹா, வலும் 28ம் நாள் நடக்கவுள்ள இரண்டாம் நாள் அமர்வில் கடல்சார் பாதுகாப்பு என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள கருத்தரங்கில் உரையாற்றவுள்ளார்.

இதற்கிடையே, அடுத்த மாதம் 1ம், 2ம் நாள்களில் காலியில் நடக்கவுள்ள சிறிலங்கா கடற்படை ஒழுங்கு செய்துள்ள காலி கலந்துரையாடல் எனப்படும் கடல்பாதுகாப்புக் கருத்தரங்கிலும், இந்தியாவில இருந்து உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று பங்கேற்கவுள்ளது.

இந்த மாநாட்டின் துவக்க நாளான வரும் டிசெம்பர் 1ம் நாள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

அன்றைய நாள், இந்தியக் கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சுனில் லன்பா, ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

அதேவேளை, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்கும், வரும் ஜனவரி மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *