‘கறுப்பு ஜூலை’க்காக தமிழர்களிடம் மன்னிப்புக் கோரினார் சஜித் பிரேமதாச
1983 ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தினரிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று மன்னிப்பும் கோரியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ இன வன்முறைகள் குறித்து அதிபர் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடிகலநாதன் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் தமிழ்ச் சமூகத்தினரிடம் தனது வருத்தத்தை தெரிவித்தார்.
அந்த காலகட்டம் நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புக் கறையாக நிலைத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேசம் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சஜித் பிரேமதாச, இதன் விளைவாக ஏராளமான கமக்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும், கூறினார்.
நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் தேசத்தின் பொருட்டு அவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் சிலர் ‘பெரும்பான்மை’ மற்றும் ‘சிறுபான்மை’ சமூகங்கள் என்ற அடிப்படையில் பேசினாலும், ஒரு கூட்டு சிறிலங்கா அடையாளத்தைத் தழுவ வேண்டிய அவசியம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஒன்றுபட்ட நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், இனம், மதம், சாதி, வர்க்கம் அல்லது அரசியல் சார்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பிளவுகளைக் கடந்து தேசம் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
