மேலும்

கப்பல்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா தட்டிக்கழிக்க முடியாது – ஈரானிய தூதுவர்

அனைத்துலக உடன்பாடுகளில் கையெழுத்திட்ட ஐ.நா உறுப்பு நாடு என்ற வகையில், தனது தனித்துவ பொருளாதார வலயத்தில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குத் தேவையானதை வழங்குவதிலிருந்து சிறிலங்கா விலகிக்கொள்ள முடியாது என  ஈரானியத் தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக கடல் சட்ட உடன்பாடு (பிரிவு 98),  கடலில் உயிர்ப் பாதுகாப்பு குறித்த அனைத்துலக பிரகடனம் (SOLAS) மற்றும்,  அனைத்துலக கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்ட நாடு என்ற வகையில் இந்தக் கடப்பாடு சிறிலங்காவிற்கு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கப்பல்களுக்கு சிறிலங்கா அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை வழங்காது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் கூறியது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே ஈரானியத் தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் இதனைக் குறிப்பிட்டார்.

ஜேவிபியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு அறிக்கைக்கு முரணாக, ஈரானுக்கு எதிரான சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்சமான அமெரிக்கத் தடைகளை இலங்கை எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்றும் அவர்  கேள்வி எழுப்பினார்.

மேற்கூறிய உடன்படிக்கைகள் கடைப்பிடிக்கப்படா விட்டாலும், எழுதப்படாத ஆனால் கட்டுப்படுத்தும் உடன்படிக்கைகள் இருப்பதாகவும், அவை சிறிலங்காவை உதவி செய்யக் கட்டாயப்படுத்துகின்றன.

அது கடந்தகால நட்பை மறக்காததற்கான உடன்படிக்கை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உடன்படிக்கை.

இந்த உடன்படிக்கைகள் எந்தவொரு நாட்டையும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலிருந்து விலக்களிக்கவில்லை.

குறிப்பாக சிறிலங்கா, அதன் அண்மைய வரலாறு முழுவதும் ஈரானிய உதவியைப் பெற்று வந்துள்ளது என்றும் ஈரானியத் தூதுவர் வலியுறுத்தினார்.

அதேவேளை,  தேசியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, இராணுவ நடவடிக்கையைச் சீர்குலைக்க மேற்கத்திய நாடுகள் முயன்று கொண்டிருந்த வேளையில், ஈரானிய அரசாங்கம் எவ்வாறு விரைவாகவும் உறுதியாகவும் உதவி வழங்கியது என்பதை தெஹ்ரானுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் எம்.எம். சுஹைர் நினைவுபடுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் போர்  முக்கியமான கட்டத்தை எட்டியபோது, ​​அரசாங்கம் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தது.

உயர்மட்டப் பேச்சுக்களைத் தொடர்ந்து,  சிறிலங்காவுக்கு  1.05 பில்லியன் டொலர் மதிப்புள்ள வட்டியில்லா மற்றும் சலுகை எண்ணெய் கடன் வசதியை ஈரான் வழங்கியது.

அந்த தொடர் கடன் வசதி இல்லாதிருந்தால், கடுமையான அந்நியச் செலாவணி அழுத்தங்களை ஏற்படுத்தி, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு சமாளிக்க முடியாத சவாலை எதிர்கொண்டிருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, தற்போது முடிவெடுக்கும் பதவிகளில் இருப்பவர்கள் கடந்த காலத்தை மறந்து விட்டனர் என்றும்  தெஹ்ரானுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் எம்.எம். சுஹைர்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *