மேலும்

ஞானசார தேரருக்கு சாதாரண உடை- மகாநாயக்கர்கள் கூட்டாக கடிதம்

கலகொட அத்தே ஞானசார தேரரை சாதாரண உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது  குறித்து கவலை தெரிவித்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு, நான்கு முக்கிய நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

துறவியின் ஆடையை அகற்றும் முடிவு தங்களுக்குக் கவலையையும் ஆச்சரியத்தையும் அளிப்பதாக மகாநாயக்க தேரர்கள் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர்.

மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரககொட சிறி ஞானரதன தேரர், அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கர் கரகொட-உயங்கொட மைத்ரி மூர்த்தி தேரர் மற்றும் ராமன்ன மகா நிகாயவின் மகாநாயக்கர் மகுலாவே சிறி விமல தேரர் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசியலமைப்பையும் நீதித்துறை நடைமுறையையும் மதிப்பதாகக் கூறியுள்ள மகாநாயக்கர்கள், ஒரு துறவியின் ஆடையைக் களைவது அல்லது அவரது துறவி அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது, ஒரு மதரீதியான விடயம் என்றும், அது சிறை அதிகாரிகளால் மட்டும் தீர்மானிக்கப்படக் கூடாது என்றும், மகா சங்கத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஞானசார தேரர் பராஜிகக் குற்றம் செய்ததாகவோ அல்லது அவர் பௌத்த சங்கத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றோ சம்பந்தப்பட்ட சங்க சபை தீர்மானிக்கவில்லை.

சிறைச்சாலை நிலையான விதிமுறைகளின் 550-வது ஒழுங்குமுறையின் படி, தண்டனை பெற்ற கைதிகள் சிறை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படக் கூடாது என்றும், தண்டனைக்கு முன்பு அவர்கள் சாதாரணமாக அணிந்திருந்த ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு பௌத்த துறவியைப் பொறுத்தவரை, இது அவரது துறவற ஆடையைக் குறிக்கும் என்றும் மகாநாயக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கைதிகளை சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது அவர்கள் தங்களின் சாதாரண ஆடைகளை அணிய அனுமதிக்கும், கைதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குறைந்தபட்ச தரநிலை விதிகளையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் போது, தனது கவுரவத் துணிகளை அணியவும், சிறைக் காவலில் இருக்கும்போது தனது துறவி நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என , மகாநாயக்க தேரர்கள், வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *