மேலும்

கைதிகளுக்கான சீருடையில் ஞானசார தேரர் – சிறைத்தண்டனை ஆரம்பம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட, பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று  உத்தரவிட்டது.

கைது செய்வதற்கான திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், அவரது தண்டனையின் எஞ்சியுள்ள காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் பணித்தது.

ஞானசார தேரருக்கு நேற்று சிறைச்சாலைக்கான சீருடை வழங்கப்பட்டதாகவும், அவர் சாதாரண கைதிகளுக்கான பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லதென்ன தெரிவித்தார்.

அவரது துறவிக்குரிய ஆடைகள் அகற்றப்பட்டு, தற்போது கைதிகளுக்குரிய சீருடை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நிலுவையில் இருந்த பிடியாணை உத்தரவுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *