மேலும்

சுரேஷ் சாலேயின் தடுப்புக்காவலை நீடிக்க வேண்டாம்- சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை  பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என்று, அவரது மனைவி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓகஸ்ட் 20 நாள் அனுப்பியுள்ள கடிதத்தில் அவர், இதய நோய் பிரச்சினைகளால் தனது கணவனுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படும்  நிலையில்,  அவரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் தடுப்புக் காவலுக்கு மாற்றுமாறு, கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலில் இருந்தபோது, ​​குறிப்பாக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர், சாலேயின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அவரது மனைவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 7 ஆம் நாள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூன் 27ஆம் நாள்  மருத்துவமனையின் இதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்ட  சாலேக்கு, இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு,  கார்டியோவெர்ட்டர்-டிஃபைப்ரிலேட்டர் (ICD) பொருத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு நெருக்கமான மற்றும் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுவதாகவும், அவரை தேசிய மருத்துவமனையிலிருந்து மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்குக் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவரது மனைவி கூறியுள்ளார்.

எனவே, தற்போதுள்ள தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியாக அனுமதித்து, சாலேயை விளக்கமறியல் காவலுக்கு மாற்றுமாறு பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார  திசாநாயக்கவிடம், அவர் வலியுறுத்தியுள்ளார்.

சாலேயோ அல்லது அவரது குடும்பத்தினரோ விசாரணைக்குத் தடையாகவோ அல்லது தலையிடவோ எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலேக்கு எதிராக இரண்டு முறை சிறிலங்கா அதிபர் விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவு எதிர்வரும் 28ஆம் நாளுடன் காலாவதியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *