இராணுவ முகாம்கள் அமைய வேண்டிய இடங்களை முப்படையினரே தீர்மானிக்க வேண்டும்
தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர்களின் பணி என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போர்க் காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவித்து, வழங்குவதை விரைவுபடுத்துவது தொடர்பாக, நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர்களின் பணியாகும்.
அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியும், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது குறித்து உடனடியாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இதன் போது சிறிலங்கா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.


