அடுத்தவாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் வகையிலான, 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 18ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பி்க்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சிறிலங்கா அரச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
மேல்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றங்களை முன்மொழியும் நீதித்துறை (திருத்த) சட்டமூலமும் அதே நாளில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 19-லிருந்து 24-ஆக உயர்த்துவதற்கும் 22வது திருத்தச் சட்டமூலம் முன்மொழிகிறது.
இந்த இரண்டு சட்டமூலங்களின் முதல் வாசிப்பு ஓகஸ்ட் 18 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களும் அமைப்புகளும் அவற்றின் அரசியலமைப்புச் சட்டத்தன்மையை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
