சிறிலங்கா இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்
சிறிலங்கா இராணுவத்தின் 26வது தளபதியாக, மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்றிகோ இன்று தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் நிலையில், அவருக்குப் பதிலாக புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 1ஆம் நாள் முதல் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவிடம், அவருக்கான நியமனக் கடிதத்தை சிறிலங்கா அதிபரின் செயலாளர் இன்று மாலை கையளித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன கடந்த ஜூன் மாதம் தொடக்கம், சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
சிறிலங்கா பீரங்கிப்படைப் பிரிவின் மூத்த அதிகாரியான இவர், தனது இராணுவப் பணிக்காலத்தில் பல முக்கிய கட்டளைப் பதவிகளை வகித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ள மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவை, லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்த்தும் அறிவிப்பையும் சிறிலங்கா அதிபர் வெளியிட்டுள்ளார்.

