வலி.வடக்கு மக்கள் யாழ்ப்பாணத்திலும் பலாலியிலும் போராட்டம்
வலி.வடக்குப் பிரதேச மக்கள் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் இன்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.
வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாள், பலாலி படைத்தளத்தைச் சுற்றி மோதல்கள் ஆரம்பித்த நிலையில், வலி.வடக்கு பிரதேச மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறினர்.
போர் முடிந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்களை மீளக் குடியேற அனுமதிக்காமல் சிறிலங்கா படையினர், நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமது காணிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினரை வெளியேற்றி, தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும், பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.







