45 ஈரானிய மாலுமிகளின் சடலங்களை இன்று தெஹ்ரானுக்கு அனுப்ப ஏற்பாடு
காலிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட, ஈரானிய கடற்படைக் கப்பலில் இருந்த 45 மாலுமிகளின் சடலங்கள் முதற்கட்டமாக இன்று தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
கடந்த 4ஆம் நாள் காலியில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலினால் மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கப்பலில் இருந்த, 84 மாலுமிகளின் சடலங்களை சிறிலங்கா கடற்படை மீட்டிருந்தது.
இந்த சடலங்கள் காலி கராபிட்டிய மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்ட வந்த நிலையில், அவற்றை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு, காலி மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இன்று மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து ஈரானுக்கு சடலங்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இன்று காலை 45 ஈரானிய மாலுமிகளின் சடலங்கள் கராபிட்டிய மருத்துவமனையில் இருந்து, மத்தல விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இவை இன்று ஈரானுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், அடுத்த கட்டமாக ஏனைய சடலங்கள் விரைவில் ஈரானுக்கு அனுப்பப்படும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன
