மேலும்

சிறிலங்கா அதிபரை சந்திப்பதை தவிர்த்த சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தென்னாபிரிக்காவிலிருந்து சீனாவுக்குத் திரும்பும் போது, சிறிலங்காவில்  தங்கியிருந்தாலும்,  கொழும்புக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச்  சந்திப்பதே ஆரம்பத் திட்டமாக இருந்தது.

இருப்பினும், கடைசி நேரத்தில், அவர் தனது அட்டவணையை மாற்றி, கட்டுநாயக்காவில் உள்ள ஜெட்விங் லகூன் விடுதியில் தங்கியதுடன், சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவில்லை.

சீன வெளியுறவு அமைச்சர் கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தாலும், அதிபரைச் சந்திக்க கொழும்புக்கு ஏன் வரவில்லை என்பது பற்றிய மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொழும்பில் சிறிலங்கா அதிபரைச் சந்திப்பதே உண்மையான திட்டமாக இருந்தது. ஆனால் நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணங்களை முடித்த பின்னர்,  வாங் யி பீஜிங்கிலிருந்து ஒரு சிறப்பு அறிக்கையைப் பெற்றார்.

இந்த அறிக்கை சிறிலங்காவுக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒப்பந்தங்களின் தற்போதைய நிலையை விவரித்தது- சில திட்டங்கள் நேர்மறையாக முன்னேறி வருவதாகவும், மற்றவை எந்த முடிவும் இல்லாமல் முடங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைதான் சிறிலங்கா அதிபருடனான சந்திப்புக்கான அனைத்து திட்டங்களையும் தலைகீழாக மாற்றியது.

அதற்கு முக்கிய காரணம், சீன ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்கா கடற்பரப்பில், நுழைய சிறிலங்கா அரசாங்கம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

கோட்டபய ராஜபக்ச நிர்வாகத்தின் போது, ​​இந்தியப் பெருங்கடலில் உளவு பார்க்க சீனா ஆய்வுக் கப்பல்களைப் பயன்படுத்துவதாக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் குற்றம்சாட்டி எதிர்த்த போதிலும், சீன ஆய்வு கப்பல்கள் சிறிலங்கா கடற்பரப்பினுள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நுழைந்தன.

இருப்பினும், ரணில் விக்கிரமசிங்க அதிபரான பின்னர், இந்தியாவின் வலுவான அழுத்தங்களால், சீன ஆய்வு கப்பல்கள் சிறிலங்கா  கடற்பரப்புக்குள் நுழைவதற்கு ஓராண்டு தடை  விதிக்கப்பட்டது.

சீனா இதனை தனது தேசிய பெருமைக்கான ஒரு பெரிய அடியாகக் கருதியது.

அந்தத் தடை 2024ஆம் ஆண்டு டிசெம்பரில் காலாவதியானது, சீனா தனது ஆய்வு கப்பல்களுக்கான அணுகலை மீளப்பெறுவதற்காக  பேச்சுக்களைத் தொடங்கியது.

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் துணைத் தலைவர் வாங் டோங்மிங், சிறிலங்கா அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சிறிலங்காவுக்கு  பயணம்  செய்தார்.

முன்னர், சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்தின் போது, ​​சீன அதிபர் கூட இதுபற்றிய  விடயங்களில்  தலையிட்டார்.

அப்போது, சீன ஆய்வு கப்பல்கள் சிறிலங்கா நீர்ப்பரப்பில் நுழைவதற்கு   மீண்டும்  அனுமதியளிப்பதாக  சிறிலங்கா அதிபர் வாய்மொழியாக ஒப்புதல் அளித்ததாகவும், இதுதொடர்பான நிலையான நடைமுறைகளை உடனடியாக உருவாக்குவதாக உறுதியளித்ததாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, சிறிலங்காவில் முதலீடுகளை அதிகரிப்பதாகவும்,  ஓராண்டுக்குள் 6 மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதாகவும் சீனா உறுதியளித்தது.

சிறிலங்கா தேவையான உள்கட்டமைப்பை முடிக்கும் வரை, முதலில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் அனுப்பப்படுவார்கள்.

சீனாவின் இந்த உத்தரவாதத்தை அடுத்தே, 2025 ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வரும் ஆண்டாக இருக்கும் என்று சிறிலங்கா அதிபரும், அரசாங்கத் தலைவர்களும் பகிரங்கமாக அறிவித்தனர்.

மேலதிகமாக, சிறிலங்காவின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டை மேற்கொள்வதற்கும்,  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில்  3.7 பில்லியன்  டொலர்  செலவில்  எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கும் சினோபெக் ஒப்புக்கொண்டது.

சீன ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்குவதை அரசாங்கம் தாமதப்படுத்தியதால், சீனா இப்போது எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சரின் வருகையின் போது, சிறிலங்கா அதிபருடன் நடத்த திட்டமிடப்பட்ட சந்திப்பை, ஒருதலைப்பட்சமாக ரத்து செய்தது அதன் ஒரு படியாகும்.

அடுத்த படியாக, 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் சினோபெக் நிறுவனம் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்த சீனா முடிவு செய்தது.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் அமெரிக்காவிற்கு பயணம்  செய்தபோது, ​​சினோபெக் ஒப்பந்தத்தை இடைநிறுத்த அமெரிக்காவினால் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்தில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் வொஷிங்டனுக்குச் சென்று திட்டத்திற்கு எதிராக பரப்புரை செய்வதில் இணைந்தார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் நடந்த கலந்துரையாடல்களில், அமெரிக்க அதிகாரிகள் உடன்பாட்டை நிறுத்துமாறு நேரடியாக அவரை வலியுறுத்தினர்.

இருப்பினும், இது சிறிலங்காவின் மிகப்பெரிய முதலீடு என்றும், பெரும்பாலான பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன என்றும், அமெரிக்கா இன்னும் சிறிலங்காவுக்கு பெரிய முதலீடுகளை வழங்கவில்லை என்றும் விஜித ஹேரத்  கூறியிருந்தார்.

இதனால், சினோபெக் தனது திட்டத்தை தொடர்ந்தது. ஆனால் இப்போது, ​​அம்பாந்தோட்டையில்  சுத்திகரிப்பு  நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வந்த குழு நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு சீனா திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதி உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டாம் என்று சினோபெக் நிறுவனத்தின் தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சிறப்பு செய்தியை பீஜிங் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தை ரத்து செய்ய சீனா உறுதியாக முடிவு செய்யவில்லை என்றாலும், அந்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

சீன ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைவது தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினையுடன் இந்த இடைநிறுத்தம் தொடர்புடையது என்று பலர் சந்தேகிக்கின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த மற்றொரு சம்பவம் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

அம்புலுவாவவில் சிறிலங்காவின் முதல் கேபிள் கார் திட்டத்தை ஒரு சீன நிறுவனம் திடீரென நிறுத்தியது. அதன் நிர்வாகிகள் திடீரென நாட்டை விட்டு வெளியேறினர்.

அத்துடன், சீனா மற்றொரு நுட்பமான விளையாட்டை விளையாடுவதாகத் தெரிகிறது.

இது சுற்றுலாத்துறையை உள்ளடக்கியது. முன்னதாக, ஓராண்டுக்குள் 6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு அனுப்புவதாக சீனாவினால் உறுதியளிக்கப்பட்டது. இது சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுக்கும்.

ஆனால் இப்போது, ​​சீனா அந்த வாக்குறுதியை மாற்றியமைப்பதாகத் தெரிகிறது.

சீனா, சுற்றுலாத்துறை மூலம் பாரிய செல்வாக்கைப் பயன்படுத்துகிறது, அதன்மூலம்   பொருளாதாரங்களை  மேம்படுத்தவோ அல்லது பலவீனப்படுத்தவோ முடியும்.

கடந்த ஆண்டு, சீனா அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதன் மூலம் தனது வாக்குறுதியை நிறைவேற்றியது, இது வருகை மற்றும் அந்நிய செலாவணி வருவாய் ஆகிய இரண்டையும் அதிகரித்தது.

ஆனால் சிறிலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, சீனா அதன் முந்தைய வாக்குறுதியை மீறியுள்ளதாக தற்போதைய அறிக்கைகள், கூறுகின்றன.

இது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், ஆய்வு கப்பல் பிரச்சினை இதில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

சிறிலங்காவின் அடுத்த முக்கிய கவலை,  சீனா நிதியளிப்பதாக உறுதியளித்திருந்த கொழும்பு-கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டமாகும்.

சிறிலங்கா அதிபர், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஜேவிபி பொதுச் செயலர் ரில்வின் சில்வா ஆகியோர் சீனாவிற்கு மேற்கொண்ட பயணங்களின் போது, ​​சீன அதிகாரிகள் நெடுஞ்சாலைக்கான  நிதி உதவியை உறுதியளித்தனர்.

பிமல் ரத்நாயக்க சில வாரங்களுக்கு முன்னர் கூட பகிரங்கமாக இதனை அறிவித்தார்.

ஆனால் இப்போது, ​​சீனாவின் ஆர்வம் குறைந்து விட்டதாகவும், திட்டம் ஒதுக்கித் தள்ளப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன ஆய்வு கப்பல்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட அனுமதியை சிறிலங்கா வழங்கத் தவறியதால், அதிகரித்து வரும் சீனாவின் வெறுப்பை இது குறிக்கிறது.

அந்த வெறுப்பு தடைப்பட்ட திட்டங்கள், குறைக்கப்பட்ட சுற்றுலா மற்றும் நிறுத்தப்பட்ட முதலீடுகள் மூலம், பல வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது.

கடந்த வாரத்திற்குள், சீனா பல கடுமையான குறிப்புகளை வழங்கி,  அதன் அதிருப்தியை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளது.

ஆங்கில வழிமூலம் – மவ்ரட்ட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *