கணக்காய்வாளர் நியமனம்- செவ்வாயன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்டுள்ள மூத்த துணை கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.பி. ஜயரத்னவின் நியமனம் தொடர்பாக, அரசியலமைப்பு பேரவை செவ்வாய்க்கிழமை கூடிய தீர்மானிக்கவுள்ளது.
முன்னதாக இவரது பெயர் அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட நிலையில், சிறிலங்கா அதிபர் மீண்டும் அவரை முன்மொழிந்துள்ளார்.
திறந்த பல்கலைக்கழக கணக்காய்வாயர் டபிள்யூ.எம்.கே.பி.ஏ. விக்ரமசிங்கவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்ட ஜயரத்னாவின் பெயர் சிறிலங்கா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலோசிக்க செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.
சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய உறுப்பினர்களான ஒஸ்டின் பெர்னாண்டோ, பேராசிரியர் வசந்த செனவிரத்ன மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் வெள்ளிக்கிழமை நடந்த அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதும், நியமனம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், கடந்த ஒன்பது மாதங்களாக கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளது.
