செம்மணிப் புதைகுழியில் இன்றும் 10 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 10 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 38ஆவது நாள் அகழ்வுப் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதிதாக 10 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இன்று 6 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இரண்டு எலும்புக்கூடுகள் ஒன்றின் மீது ஒன்று குறுக்காக போடப்பட்ட நிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


