ஐ.தே.க மாநாட்டில் ஒன்று கூடும் ரணில், சஜித், மகிந்த, மைத்திரி
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறும்இந்த மாநாட்டில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில் வீடு திரும்பிய பின்னர், எதிர்க்கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதன் முதல் படியாக, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த அனைத்து ஐதேக உறுப்பினர்களுக்கும் எதிரான இடைநீக்க உத்தரவை கட்சி நீக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறைக்குச் சென்ற பின்னர் ரணில் முதன்முறையாக கட்சியின் மாநாட்டில், பொதுமேடையில் தோன்றி சிறப்பு அறிக்கையை வெளியிடுவார் என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, மாநாடு நடத்தப்படும் இடம், சிறிகோத்தாவில் இருந்து நடுநிலையான இடத்திற்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.தே.க மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததாகவும், சஜித் பிரேமதாச மற்ற கட்சி உறுப்பினர்களுடன் கலந்து கொள்வார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் இணைந்து பணியாற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
