முத்தையன்கட்டில் சிறிலங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதாக அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், காணாமல் போன நிலையில் அடிகாயங்களுடன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முத்தையன்கட்டு ஜீவநகரைச் சேர்ந்த, ஏழு மாத குழந்தையின் தந்தையான, எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய இளம் குடும்பத் தலைவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முத்தையன்கட்டு குளம் இடதுகரை சிறிலங்கா இராணுவ முகாமை அகற்றி வரும் சிறிலங்கா இராணுவத்தினர், நேற்றுமுன்தினம் இரவு பழைய இரும்புப் பொருட்கள் இருப்பதாகவும் வந்து எடுத்துச் செல்லமாறும், அப்பகுதி இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறிலங்கா இராணுவ முகாமுக்குச் சென்ற நான்கு இளைஞர்களை 20இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினர், தடிகள், கம்பிகளால் துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்.
முகாமின் பின்புறமாக உள்ள குளம் வரை விரட்டிச் சென்று அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட 3 இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
நேற்று கிராம மக்கள் நேற்று அவரைத் தேடி வந்ததுடன், குளத்தில் வலை இழுத்தும் தேடுதல்களை நடத்தியிருந்தனர்.
இந்தநிலையில், இன்று காலை இராணுவ முகாமின் பின்பகுதியில் உள்ள குளத்தில் இரத்தக் காயங்களுடன் இளைஞனின் சடலம் காணப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தினர் தனது தம்பியை அடித்து கொலை செய்து விட்டு, இன்று அதிகாலை குளத்தில் வீசியுள்ளதாக இறந்தவரின் சகோதரர் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து நீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.