அரசிதழை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை
வடக்கு காணிகள் சுவீகரிப்பது குறித்து பிரசுரித்த அரசிதழ் அறிவிப்பை, இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அரசிதழை மீளப்பெறல் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
“காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், 2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவித்தலில் காணிகளுக்கான உரித்தை 3 மாத காலத்துக்குள் கோர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசிதழின் படி, அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
காணி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இந்த அரசிதழை இடைநிறுத்த முடியாது.அதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏதும் கிடையாது.
மூன்று மாத காலத்துக்குள் உரித்துக்களை உறுதிப்படுத்தாவிடின் தமிழ் மக்களின் தனியார் காணிகள் மற்றும் பொதுக்காணிகள் அரசுடமையாக்கப்படும்.ஆகவே இந்த அரசிதழை மீளப்பெற வேண்டும்.
போர்க்காலத்தில் தமிழ் மக்கள் தமது உடமைகளை இழந்து நாட்டை விட்டு வெளியேறினார்கள்.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சனத்தொகைக்கு இணையாகவே வெளிநாடுகளில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.
காணிகளுக்கான உரித்தை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்ற நிலையில் தான், இந்த அரசிதழ் ஊடாக 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் குறித்து எவரும் அறியவில்லை.
இனவாதத்தின் உச்சம் என்று குறிப்பிடப்பட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் கூட, இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.
காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் குழுவோ அல்லது ஆணைக்குழுவோ அமைத்து ஆராயப்பட்டிருக்க வேண்டும். நாங்களும் ஒத்துழைப்பு வழங்கியிருப்போம்.
காணி என்பது எமது அடிப்படைப் பிரச்சினை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீக காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்ட வகையில் அமைக்கப்பட்டன.
இதனால் தான் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த அரசிதழை அரசாங்கம் உடன் விலக்கிக் கொள்ளவேண்டும்.
இந்த அரசிதழுக்கு அமைய செயற்பட்டால் தேசிய நல்லிணக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுகிறேன் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
