ஊழல்களை கண்காணிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் உள்விவகாரப் பிரிவு
பொதுச்சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளைக் கையாளுவதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ், அதிபர் செயலக சுற்றறிக்கையின்படி, இந்தப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
ஊழலைக் குறைப்பதும், நிறுவன வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல்களைக் கண்டறிந்து மதிப்பிடுவதற்கும், உள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதும் இதன் பொறுப்பாகும்.
இந்தப் பிரிவு அதிபர் செயலகம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும், ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இந்தப் பிரிவின் தலைவராக பிரியங்கனி ஹேவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
