மேலும்

பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரினார் ரணில்

Ranilஅண்மைய நாட்களில் ஏற்பட்ட எதிர்பாராத நீண்ட மின்சாரத் தடைகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்குள் மூன்றாவது தடவையாக நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையை அடுத்து, நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் அவர், நாடளாவிய ரீதியில் மூன்றாவது தடவையாக ஏற்பட்ட மின்சாரத் தடையை மோசமான நிலை என்றும், இதனைத் தொடர அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், எனது தலைமையில்,மின்சக்தி அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இதுதொடர்பாக நேற்று சிறப்பு கலந்துரையாடலை நடத்தி அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 23ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மின்சக்தி அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் தொடராதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதும், தற்போதைய மற்றும் எதிர்கால மின்சாரத் தேவைகள் தொடர்பான பொருத்தமான திட்டங்கள் தயாரிக்கப்படவில்லை.

எனவே. புதிய திட்டத்துக்கு உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையை பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மைய மின்சாரத் தடைக்கான காரணங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்காக நீண்டகால மற்றும் குறுங்கால தீர்வுகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துச் செயற்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த மின்சாரத் தடைகளுக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், அனைத்து மின்சார நிலையங்களிலும், சிறிலங்கா இராணுவத்தினரை நிறுத்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, மின்சாரத் தடைக்கான காரணங்களைக் கண்டறியும் விசாரணைகளுக்குத் தேவைப்பட்டால், வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படும் என்று மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *