முல்லைத்தீவு, மன்னாரில் பிரபாகரனின் ஒளிப்படங்களை காட்சிப்படுத்தியவர்கள் கைது
மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில், நினைவேந்தல் நிகழ்வுகளின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தியதற்காக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
கடந்த வாரம் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளை சிறிலங்கா காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்தனர்.
அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் திலீபனின் உருவப்படங்களைக் காட்சிப்படுத்தியது தொடர்பாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு அல்லது தெற்கு என எந்தப் பகுதியில் வசித்தாலும், மக்கள் தங்கள் உறவினர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது.
வெளிநாடுகளில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் பழைய படங்கள் மற்றும் காணொளிகள், சிறிலங்காவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் போல சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
