நீதிமன்றத்தில் பல கேள்விகளுக்கு நினைவில்லை என்று மழுப்பிய கோட்டா
பாதுகாப்புச் செயலராகப் பணியாற்றிய போது நடந்த முக்கிய சம்பவங்கள், குறிப்பாக ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து தனக்கு நினைவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நீதிமன்றத்தில் பலமுறை தெரிவித்துள்ளார்.
அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனது தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில், நேற்று அவர் இரண்டாவது முறையாக சாட்சியமளித்தார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திலிருந்து மெய்நிகர் முறையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையாகி இந்த சாட்சியத்தை அளித்தார்.
இதன்போது, ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவைத் தனக்குத் தெரியுமா என்று வினவியபோது, தனக்குத் தெரியாது என்று கோட்டபய ராஜபக்ச பதிலளித்தார்.
ஆனால், ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவைத் தெரியுமா என்று கேட்டபோது, அவரைத் தனக்குத் தெரியும் என்று கூறினார்.
இந்த இரு ஊடகவியலாளர்களும் 2009-ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சில் அவரைச் சந்தித்தனரா என்று கேட்டதற்கு, அது குறித்து தனக்கு நினைவில்லை என்று பதிலளித்தார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்த விவரங்களும் தனக்கு நினைவில்லை என்று கூறிய கோட்டாபய ராஜபக்ச, அவரை விடுவிக்குமாறு தான் உத்தரவிட்டதாகக் கூறப்படுவதை முற்றிலுமாக மறுத்தார்.
பாதுகாப்புச் செயலராக இருந்தபோது விசாரணைகளை முன்னெடுப்பது தனது பொறுப்பு அல்ல என்றும், கொள்கை முடிவுகளை எடுப்பதும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதுமே தனது முதன்மையான கடமைகளாக இருந்தன என்றும் அவர் வாதிட்டார்.
குமார் குணரத்னம் கைது செய்யப்படுவதற்குத் தேவையான தகவல்களை ஜே.வி.பி அமைப்பும் அனுர குமார திசாநாயக்கவும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படும், 2015-ஆம் ஆண்டு நாளிதழ் நேர்காணல் ஒன்றின் ஒலிப்பதிவு நீதிமன்றத்தில் ஒலிக்கப்பட்டபோது, அவரது நினைவாற்றல் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த நேர்காணல் குறித்து தனக்கு நினைவில்லை என்றும், அந்த ஒலிப்பதிவு தெளிவாக இல்லாததால் அது தனது கூற்றுதானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அவரது சட்டவாளரும், கேட்கப்பட்ட பல கேள்விகள் இந்த வழக்கோடு தொடர்புடையவை அல்ல என்று வாதிட்டு ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரிடம் சாட்சியம் பெறும் விசாரணை, பிப்ரவரி 12-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்று கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
