மேலும்

அனைத்துலக விசாரணையின்  தெளிவான தேவையை வலியுறுத்துகிறது ஐ.நா அறிக்கை

நீதி, உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவற்றை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கத்தின் பல பத்தாண்டு காலத் தோல்வியும், ஐ.நாவின்  அறிக்கையும், தொடர்ச்சியான அனைத்துலக விசாரணையின்  தெளிவான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவினல் ஆயுத மோதலின் போது, அனைத்துலக சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நேற்று வெளியிட்ட புதிய அறிக்கை தொடர்பாக, அனைத்துலக மன்னிப்புச் சபையின் தெற்காசிய இயக்குனர் ஸ்மிருதி சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

“சிறிலங்காவில் அனைத்துலக சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களைக் கையாள்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையும், நூறாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவை எட்டாக்கனியாகவே இருக்கின்றன என்பதையும் இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

2009-ல் முடிவடைந்த உள்நாட்டு ஆயுத மோதலின் போது இழைக்கப்பட்ட அத்துமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், அதற்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் அடுத்தடுத்து வந்த சிறிலங்காஅரசாங்கங்கள் காட்டிய விருப்பமின்மையையே இதன் கண்டுபிடிப்புகள் பிரதிபலிக்கின்றன.

செம்மணியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், குழந்தைகள் உட்பட 583-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது போன்ற, கூட்டுப் புதைகுழிகள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வரும் நிலையிலும், தண்டனையின்மை தொடர்கிறது.

அனைத்துலக சட்டத்தை அப்பட்டமாகப் புறக்கணிக்கும் சூழலில், உலகெங்கிலும் உள்ள மோதல்களில் மனிதாபிமான உதவிகளும் உள்கட்டமைப்புகளும் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இந்த அறிக்கை குறிப்பாக சரியான நேரத்தில் வந்துள்ளது.

சிறிலங்காவில் மனிதாபிமான நடவடிக்கைகள் மீதான தாக்குதல்கள், இன்றைய மோதல்களில் நாம் காணும் நிகழ்வுகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் அமைந்தன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது .

சிறிலங்காவில் பொறுப்புணர்வின்மையும், தொடரும் தண்டனையின்மையும், மற்ற இடங்களில் குற்றங்களைச் செய்து அனைத்துலகச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எவ்வாறு ஒரு ஊக்கத்தின் ஆதாரமாக அமையக்கூடும் என்பதற்கு இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக அமைய வேண்டும்.

“இந்த அறிக்கையும், நீதி, உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவற்றை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கத்தின் பல பத்தாண்டுகாலத் தோல்வியும், தொடர்ச்சியான அனைத்துலக விசாரணையின் தெளிவான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இது, மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தின் மதிப்புமிக்கப் பணிகளைத் தொடர்வதன் முக்கியத்துவத்தையும், உலகளாவிய அதிகார வரம்பின் கோட்பாடுகள் உட்பட பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்காக ஐ.நா. உறுப்பு நாடுகள் இந்தத் திட்டத்தின் வளங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது“ என்றும் கூறப்பட்டுள்ளது.‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *