மேலும்

அதிபர் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை நிராகரிப்பு- சாணக்கியன் கண்டனம்

தமிழர்களுக்கு எதிரான  ‘கறுப்பு ஜூலை’  இனவன்முறைகள் குறித்து விசாரிக்க, அதிபர் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கக் கோரி, செல்வம் அடைக்கலநாதன் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தது குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரேரணையை ஆதரித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் , நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி இந்த யோசனையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்த முடிவை கேள்விக்குள்ளாக்கினார்.

“நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி அரசாங்கம் இந்தப் பிரேரணையை நிராகரித்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

சிறிலங்கா ஏற்கனவே பல ஆணைக்குழுக்கள், விசாரணைகள், அறிக்கைகள் மற்றும்  மன்னிப்புக் கோரல்களைக் கண்டுள்ளது.

ஆனால், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் மட்டுமே விடுபட்டுள்ளது.

குற்றவியல் பொறுப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு சுயாதீன விசாரணைக்கோ அல்லது நம்பகமான நீதித்துறைச் செயல்முறைக்கோ நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒருபோதும் மாற்றாக அமைய முடியாது.

1983-இல் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவங்களுக்கு ஒட்டுமொத்த சிங்கள மக்களும் பொறுப்பல்ல.

வன்முறையின் போது பல சிங்களக் குடிமக்கள் துணிச்சலுடன் தமிழ்க் குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தனர். அவர்களின் மனிதாபிமானம் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது.

மாறாக, இந்த அராஜகங்களை ஒழுங்கமைத்த, மேற்கொண்ட, அதற்குத் துணைநின்ற அல்லது அரசியல் ரீதியாக ஆதரவளித்த தனிநபர்கள் மீதே பொறுப்புக்கூறல் கவனம் செலுத்த வேண்டும்.

1983இல் தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு அரசியல் ஆதரவு வழங்கியவர்கள் இன்றும் நம்மிடையே இருக்கலாம். பொறுப்பானவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.

‘கறுப்பு ஜூலை’ உட்பட கடந்த கால இன வன்முறைகளை விசாரிக்க முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 2001-இல் அதிபர் விசாரணை ஆணைக்குழு  நியமிக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு  பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

வன்முறையால் ஏற்பட்ட துயரங்களுக்காக, 2004 ஆம் ஆண்டில் அரசு தரப்பில் சிறிலங்கா அதிபர் குமாரதுங்க தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகள், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது அர்த்தமுள்ள வகையில் குற்றவியல் ரீதியான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவில்லை.

குற்றங்களை அடையாளம் காண்பது, அட்டூழியங்களைப் பதிவு செய்வது மற்றும் துயரங்களை அங்கீகரிப்பது ஆகியவை முக்கியமானவை. ஆனால் அவை மட்டும் போதாது.

பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுத் தருவதற்கான நம்பகமான பொறிமுறையும் இருக்க வேண்டும்.

கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல் இல்லாத நிலைக்கும், சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான நீதிக்கான நீண்டகாலக் கோரிக்கைகளுக்கும் இடையே  ஒற்றுமை உள்ளது.

‘கறுப்பு ஜூலை’ சம்பவத்திற்காக ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தையும் நாம் குறை கூறாதது போலவே, போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளுக்காக ஆயுதப் படைகளுக்குக் கூட்டுத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் நாம் கோரவில்லை.

தனிப்பட்ட குற்றவியல் பொறுப்புக்கூறலையே நாங்கள் கோருகிறோம்.

குற்றங்களைச் செய்தவர்கள், அதற்கு உத்தரவிட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் அல்லது வேறு விதமாகக் குற்றவியல் பொறுப்புடையவர்கள் என எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” என்றும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *