பலாலி விமான நிலைய ஓடுபாதையை நீடிக்கும் திட்டம் இல்லை- பிரதி அமைச்சர்
பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை பலாலி விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்குவது குறித்து பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடிதுவக்கு தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் இதுகுறித்து பல சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்டன. இதற்கான காணி அனுமதி பெறும் பணிகள் தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றன.
விமான நிலைய மேம்பாட்டிற்குத் தேவையான காணிகளில் சில, பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமானவை.
அதில் ஒரு பகுதியை பொதுமக்களிடம் ஒப்படைக்கவும், மற்றொரு பகுதியை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
விமான நிலைய மேம்பாட்டிற்குத் தேவையான காணிகளை, ஏற்கனவே சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளிலிருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
தற்போதைய நிலையில் தனியார் காணிகளை சுவீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இருப்பினும், எதிர்காலத்தில் ஏதேனும் தனியார் காணிகளை சுவீகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடத்தை மேம்படுத்தும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவடையும்.
தற்போதுள்ள ஓடுபாதை 1,700 மீட்டர் நீளம் கொண்டது. இது ஏடிஆர் 72 (ATR 72) போன்ற, குறுகிய ஓடுபாதைகளில் இயங்கக் கூடிய பயணிகள் விமானங்களுக்கு ஏற்றது.
தற்போதைக்கு ஓடுபாதையை நீடிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடிதுவக்கு குறிப்பிட்டார்.
