சிறிலங்கா காவல்துறையை மேம்படுத்த உதவுகிறது சீனா- உடன்பாடு கைச்சாத்து
சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கும், காவல்துறை உட்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்கும் சீனா உதவி வழங்கவுள்ளது.
இதற்கான உடன்பாடு, நேற்றுக் காலை சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சீனத் தூதுவர் வெய் ஹுவா சியாங் (Wei Huaxiang) மற்றும், சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கும் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் புதிய வகை குற்றச் செயல்களைப் புரிந்து கொள்வதற்கும், அத்தகைய குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை இன்னும் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கும், சிறிலங்கா காவல்து அதிகாரிகளின் திறனை இந்த உதவி வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வில், சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

