மேலும்

அனோஜன் விடுதலைக்கு மேன்முறையீடு செய்ய நாளை சவூதி செல்கிறது நால்வர் குழு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவணத் தயாரிப்புப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக, அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முயற்சிகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பது குறித்துப் பேச்சு நடத்துவதற்காக, இரண்டு சிறிலங்கா அதிபர் சட்டவாளர்கள் உட்பட நான்கு பேர் கொண்ட தூதுக்குழு நாளை சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மூத்த சட்டவாளர்கள் உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, வரும் புதன்கிழமை  அல்லது வியாழக்கிழமை சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு சட்டவாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, பௌத்த, முஸ்லிம், இந்து மக்களும் மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து சிறிலங்கா அதிபரிடம் கடிதங்களை வழங்கியுள்ளனர்.

இதற்கிடையே, அனோஜன்  மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவரை விடுதலை செய்யக் கோரும் மேல்முறையீட்டிற்கு 10 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை சவூதி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், பல அனைத்துலக அமைப்புகளும் அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரசுக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *