மேலும்

சுரேஷ் சாலே தகவல்களை மறைக்காமல் வெளிப்படுத்தி ஒத்துழைக்க வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தொடர்புடைய தகவல்களையும் வெளிப்படுத்தி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

முன்னாள் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரி என்ற முறையில், விசாரணைக்கு உதவக்கூடிய எந்தவொரு தகவலையும் சுரேஷ் சாலே புலனாய்வாளர்களுக்கு வழங்க வேண்டும்.

தகவல்களை மறைப்பதால் எந்தப் பயனும் இல்லை. சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் அவர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனக்குத் தெரிந்ததை வெளிப்படுத்தி, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உதவுவதே  சுரேஷ் சாலே செய்யக்கூடிய சிறந்த விடயம்.தகவல்களை மறைப்பதில் எந்தப் பயனும் இல்லை.

அவருக்காக எந்தவொரு சிறப்பு சிறை அறையோ அல்லது தனி வசதிகளோ வழங்கப்படவில்லை.

தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்குப் பொருந்தக்கூடிய நிலையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

இருப்பினும், தேவையான மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உறவினர்கள் அவரைச் சந்திக்கவும் உணவு வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது. தேவைப்படும்போது மருத்துவ சிகிச்சை தாமதமின்றி அளிக்கப்படுகிறது.

முந்தைய வழக்குகளில் பயன்படுத்தப்பட்டதைப் போன்றே, சாலேயும் வழக்கமான தடுப்புக் காவல் ஏற்பாடுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரது உடல்நிலையையும் நலனையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *