மேலும்

வங்காள விரிகுடாவில் நீர்மூழ்கிகளை நிறுத்த திட்டமிடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் கடற்படை பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கியை இணைத்துக் கொள்வதன் மூலம், வங்காள விரிகுடாவில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்ப்பதாக, பாகிஸ்தான் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கியை சீனாவில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற, பாகிஸ்தான் கடற்படையின் 18வது நாசகாரி கப்பல் படைப்பிரிவின் தளபதியான கொமடோர் உமர் பாரூக், கொழும்பு துறைமுகத்தில்  பிஎன்எஸ் தைமூர் என்ற போர்க்கப்பலில் சிறிலங்கா அதிகாரிகள் மற்றும் தூதுவர்களுடனான சந்திப்பின் போதே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமான இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பலின் இணைப்பு, வங்காள விரிகுடாவில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பரந்த எல்லையை பாகிஸ்தானுக்கு வழங்கும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையே, இராணுவ ஈடுபாடுகள் உள்ளிட்ட, வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளின் பின்னணியில் அவரது இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும், இதே வகையில் எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் கொமடோர் உமர் பாரூக்  கூட்டத்தில் தெரிவித்தார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட பி.என்.எஸ் ஹங்கோர், காற்றுச் சார்பற்ற உந்துவிசை (AIP) அமைப்பைக் கொண்டுள்ளது.

இது மேற்பரப்பிற்கு வராமல் வாரக்கணக்கில் நீருக்கடியில் செயல்பட அனுமதிக்கிறது. இதன் மூலம், அவற்றைக் கண்டறிவது கடினம் என்பதுடன் தப்பிப்பிழைக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான  பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர்,  மகத்தான ஆற்றல், குறிப்பிடத்தக்க வளங்கள் மற்றும் முக்கியமான புவிசார் மூலோபாய அமைவிடம் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு துடிப்பான நாடான சிறிலங்காவுடனான நெருங்கிய உறவில் பாகிஸ்தான் பெருமிதம் கொள்கிறது என்றும், கடற்படை இராஜதந்திரமும் பாதுகாப்பு ஒத்துழைப்பும் இந்த நீடித்த கூட்டாண்மையின் மூலக்கற்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *