மேலும்

சுரேஷ் சாலே கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே, நேற்றிரவு கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்இரவு, மேஜர் ஜெனரல் சரேஷ் சாலே,  மருத்துவ சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் இருக்கும் தனது கணவன் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சுதந்திரமான குற்றவியல் விசாரணை நடத்தக் கோரி, சுரேஷ் சாலேயின் மனைவி, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு கடிதம் எழுதிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, சுரேஷ் சாலேக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை விடுவிக்கக் கோரியும், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *