மேலும்

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை- ரில்வின் சில்வா

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை என, ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பு பணியகத்தை திறந்து வைத்த  பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் பதிலளித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தோம்.

அவ்வாறு திட்டமிட்டிருந்த வேளையில், நாட்டில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிச் சூழலும் உருவானது.

அனர்த்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக 500 பில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியே இதற்காக பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே இந்த ஆண்டில் தேர்தலை நடத்த முடியாமல் போனது.

அதேவேளை, தற்போது சில புதிய சட்டப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், மாகாண சபைத் தேர்தலை நடத்தும், சட்டவழிமுறைகளில் குளறுபடிகள் ஏற்பட்டதே இதற்குப் பிரதான காரணம்.

தற்போது, மாகாண சபைத் தேர்தலை எந்தச் சட்டத்தின் கீழ் நடத்துவது என்பது குறித்து, ஆராய நாடாளுமன்றத்தில் ஒரு குழுவை நியமித்துள்ளோம்.

அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அது குறித்துப் பரிசீலித்து, அடுத்த ஆண்டில், வேறு ஏதேனும் பாரிய பிரச்சினைகள் எழாவிடின், பெரும்பாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நம்புகிறோம்.

அதேவேளை,  மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியத் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.

இந்தியாவிற்கும் சிறிலங்காவுக்கு இடையிலும்- இந்திய அரசாங்கத்துக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் இடையிலும் மிகச் சிறந்த, நட்புறவான தொடர்பும், நல்லதொரு புரிதலும் உள்ளது என்றும், ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *