அமெரிக்காவின் தடைகளால் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக சவேந்திர சில்வா புலம்பல்
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால், தன் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அவர், இந்தத் தடைகள் தன்னையும் தனது குடும்பத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், தனது மகள்களால் மாநாடுகளுக்காக அமெரிக்கா செல்ல முடியவில்லை என்றும், அன்றாட நிதிப் பரிவர்த்தனைகள் கூட கடினமாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“என்னைப் பொறுத்தவரை, எனது கடன் அட்டையைக் கொண்டு பணம் கூட செலுத்த முடியவில்லை.இதுதான் உண்மையான யதார்த்தம்.
என்னுடன் தொடர்புடைய அனைத்துலக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள தனது சகோதரர் மற்றும் மைத்துனியின் கணக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடைசி நாளில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டு படைப்பிரிவுகளில் ஒன்றிற்கு நான் தலைமை தாங்கினேன்.
போரின் இறுதிக்கட்டத்தில் 53, 55, 57 மற்றும் 58-வது டிவிசன்களில் பணியாற்றிய படையினர், தகுதிச் சரிபார்ப்பு நடைமுறைகளின் பின்னர் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
அவர்கள் அந்தப் படைப்பிரிவில் சிறிதளவு காலம் இருந்திருந்தாலே, அமைதி காக்கும் நடவடிக்கைகளிலிருந்து அவர்களை நீக்குவதற்கு போதுமான காரணமாக இருந்தது.
எனது இரண்டு மகள்கள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களைச் சந்திக்க வெளிநாடு செல்லும் வசதி எங்களுக்கு இல்லை. அவர்கள் எங்களைப் பார்க்க இங்கு வர வேண்டும்.
தெற்காசியாவில் சில நாடுகளில் மட்டுமே என்னால் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும்.
மற்ற இடங்களில், நாங்கள் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டிருப்போம்.
தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள், டிஜிட்டல் சேவைகளைப் பெறுவதிலும் எனக்கு தடைகள் உள்ளன.
நான் அலைபேசியைப் புதுப்பிக்க முயன்ற போது, என்னால் iCloudஅணுகலைக் கூடப் பெற முடியவில்லை. நான் கடவுச்சொல்லை உள்ளிட்டபோது, iCloud தடுக்கப்பட்டிருந்தது. என்னால் கூகுளைப் பயன்படுத்த முடியவில்லை.என்றும் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின்போது மனித உரிமைகளை மிக மோசமாக மீறியதில் ஜெனரல் சவேந்திர சில்வா மீதான நம்பகமான குற்றச்சாட்டுகள் இருப்பதால், 2020 ஜனவரியில், அவருக்கு எதிராக அமெரிக்கா பயணத் தடைகளை அறிவித்தது.
இந்தத் தடைகள், அனைவி மற்றும் மகள்கள் உள்ளிட்ட அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
