மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் உணர்வுடன் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 வது ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு நினைவேந்தல் செயற்பாடுகள் தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் மே 18 ஆம் நாள் வரை – முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழினப் படுகொலையை நினைவுபடுத்தும் வகையிலும், உணர்வு ரீதியாக ஒன்றுபடும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கு இந்த அவலத்தின் நினைவுகளை கடத்தும் வகையிலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி  பரிமாறும்  நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று,  ஈழம் கவி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு முள்ளியவளை சந்தி அம்மன் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வை அடுத்து,  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் தமிழ் தேசியப் பேரவையினரால், முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய உணர்வார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருகோணமலை -பாட்டாளிபுரம் பகுதியில்  திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பில், இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றப்பட்டு,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும், கனகபுரம் வீதியில்  வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் இன்று காலை 10 மணி அளவில் முள்ளிவாய்க்கால்  கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆலடி சந்தி  மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால்  கொட்டும் மழைக்கு மத்தியில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை நகர பேருந்து நிலையத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றது.

வவுனியாவில், இலுப்பையடிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன்,  உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது  முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் நினைவு ஊர்தி நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் இருந்து இன்று காலை பயணத்தை ஆரம்பித்துள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பயணம் செய்யும் இந்த ஊர்தி, வரும் 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *