மேலும்

சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி நாமே – சீனாவுக்கு இந்தியா பதிலடி

சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியாவே நீடிப்பதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்காவின் முதன்மையான வர்த்தகப் பங்காளியாக சீனா மாறிவிட்டது என்று இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின்  பேச்சாளர் யூ ஜிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

2025-ஆம் ஆண்டில் சீனா-சிறிலங்கா வர்த்தகம் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள்காட்டி அவர் அந்தப் பதிவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் இந்தியா-சிறிலங்கா இருதரப்பு வர்த்தகப் பரிவர்த்தனை 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக, இந்திய வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தகப் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து, சிறிலங்காவிற்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவுக்கான சிறிலங்காவின்  ஏற்றுமதி 2020-ஆம் ஆண்டில் 689 மில்லியன் டொலர்களிலிருந்து 2025-ஆம் ஆண்டில் 1.53 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், கடந்த ஆண்டு மொத்த இருதரப்பு வர்த்தகம் 6.407 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

சிறிலங்கா ஏற்றுமதிகளுக்கு இந்தியா தற்போது இரண்டாவது பெரிய இலக்காக உள்ளது என்றும், 2000-ஆம் ஆண்டில் இந்திய-சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாடு நடைமுறைக்கு வந்ததிலிருந்து சிறிலங்காவில் இருந்து  இந்தியாவிற்கான ஏற்றுமதி 30 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *