மேலும்

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 246 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின்,  மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்,  ஆறாம் நாளான இன்று மேலும் இரண்டு மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித எலும்புக் கூட்டு தொகுதிகளுடன், இதுவரை செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை,  246 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நேற்றைய அகழ்வின் போது, அடையாளம் காணப்பட்ட  3 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள், இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை,  243  ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண் அரித்து எடுக்கப்பட்ட நிலையில் , தற்போது அவை உலர விடப்பட்டு,  அவற்றின்  மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாளை ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் நடைபெறாது எனவும் , 7ஆம் நாள் அகழ்வு பணிகள்  திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் என்றும்,  சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *