திறைசேரி நிதி மோசடியில் பணி இடைநிறுத்தப்பட்ட அதிகாரி சடலமாக மீட்பு
திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி மோசடி தொடர்பாக, பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிதியமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையில் இடம்பெற்ற இந்த மோசடிகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்,ஒரு பணிப்பாளர் மற்றும் ஒரு உதவி பணிப்பாளலும், பொதுக் கடன் முகாமைத்துவ பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் ஒரு மேலதிக பணிப்பாளர் நாயகமும் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.
அந்த அதிகாரிகளில் ஒருவரே குளியாபிட்டியவில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த அதிகாரி உயிரை மாய்த்திருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இந்த மோசடி தொடர்பான வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறையினால், அந்த அதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போது, விசாரணைக்கு முன்னிலையாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
