வட, கிழக்கில் துன்புறுத்தப்படும் செயற்பாட்டாளர்கள்- மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து, காவல்துறை மா அதிபருக்கும், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தனித்துவமான சிரமங்களை எதிர்கொள்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுத மோதல், பலவந்தமாக காணாமல் போதல், நிலம் தொடர்பான பிரச்சினைகள், முன்னாள் போராளிகளின் நிலை, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் போராட்டங்கள் மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் உள்ளிட்ட நீடித்த சவால்களை உருவாக்கியுள்ளது.
சமூகப் பணி, சமூக ஈடுபாடு மற்றும் போராட்டங்கள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பணியாற்றுகின்றனர்.
இருப்பினும், இந்தச் செயற்பாட்டாளர்களின் முயற்சிகளைத் தடுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களுக்குச் சேவைகளையும் ஆதரவையும் வழங்குவதைப் பாதிக்கும், குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்தத் தடைகள் பாலின அடிப்படையிலான வன்முறை , கலாசார மற்றும் சமூகக் களங்கம், வளப் பற்றாக்குறை முதல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் தவறாக நடத்தப்படுவது வரை பரந்துள்ளன என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைப் பாதுகாவலர்களின் பாதுகாப்பு குறித்த 2024-ஆம் ஆண்டின் பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் எண் 1-ஐ , சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
2025ஆம்ஆண்டில் குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் தலையீடுகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதையும், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சிந்தனை, மனசாட்சி, மதம், கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை மற்றும் சட்டப்பூர்வமான தொழில் ஆகிய சுதந்திரங்கள் தொடர்பான அடிப்படை உரிமை மீறல்களை இந்தப் முறைப்பாடுகள் எடுத்துக்காட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
