பிரெஞ்சு கடனை திருப்பி செலுத்தும் ஆவணங்களும் மாயம்- திறைசேரிக்கு அடுத்த அதிர்ச்சி
பிரான்சிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணினி அமைப்புகளை ஊடுருவி, திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருடிய அதே கணினி ஊருவல் குழு இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள், எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய பிரெஞ்சு கடன்கள் தொடர்பானவை என்றும், அவை காணாமல் போனது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இணைய ஊடுருவிகள் இந்த ஆவணங்களை அணுகி, மற்றொரு மோசடியைச் செய்யும் நோக்கத்துடன் அவற்றை அகற்றியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதுதொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு இணையத் தடயவியல் குழு கையாண்டு வருகிறது.
இதற்கிடையே, அவுஸ்ரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைக் கையாண்ட நிதி அமைச்சின் வெளி வளங்கள் துறை ஊழியர்கள் பயன்படுத்திய மடிகணினிகள், அலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு நேற்று தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது.
கணினி அமைப்பை ஊடுருவ, ஒரு வெளித் தரப்பினருக்கு உள்ளிருந்தே ஏதேனும் உதவி கிடைத்திருக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து வருவதாக மூத்த அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திறைசேரியின் மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டதாகவும், பணம் செலுத்துதல்களைக் கையாண்ட அதிகாரிகளின் தரப்பில் தெளிவான அலட்சியம் இருந்ததாகவும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டுச் செய்யப்பட்டதா , அரசாங்கத்தை ஒரு கடினமான சூழ்நிலையில் தள்ளுகின்ற அரசியல் உள்நோக்கம் இருந்ததா என்பதையும் கண்டறியும் வகையில், விசாரணையில் அனைத்து கோணங்களிலும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழு அமைப்பிலும் ஏற்பட்ட இந்த ஊடுருவல் கண்டறியப்பட்டதிலிருந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில், இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பில்லாமல் இருக்க, அனைத்து கடன் திருப்பிச் செலுத்துதல்களும் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட வேண்டும்,” என்றும் பிரதி நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
