சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றம் – தமிழர்கள், முஸ்லிம்கள் புறக்கணிப்பு
சிறிலங்கா அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும்,வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படாமை குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்திலும் கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த குறைபாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சரவைக்குள் புதிதாக ஒருவர் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் புதிதாக பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை அதிபர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், புதிய மற்றும் அமைச்சுக்கள் மாற்றப்பட்ட மூன்று அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நீக்கப்பட்டு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அனுர கருணாதிலக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
பிரதி அமைச்சராகப் பணியாற்றிய எச்.எம். சுசில் ரணசிங்க, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, முன்னர் அமைச்சுப் பதவிகளை வகிக்காத கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜயவீர மற்றும் எம்.எம்.ஐ.அர்கம் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
அமைச்சரவை அமைச்சர்கள்
போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் – பிமல் ரத்நாயக்க
துறைமுகங்கள், சிவில் விமான சேவை அமைச்சர் – அனுர கருணாதிலக
வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் – கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்க
10 பிரதி அமைச்சர்கள்
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் : கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் : டி.பி. சரத்
சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் : எம்.எம். மொஹமட் முனீர்
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் : எரங்க குணசேகர
சுகாதார பிரதி அமைச்சர் : முதித்த ஹன்சக விஜயமுனி
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் : அரவிந்த சேனாரத் வித்தாரண
இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் : எச்.எம். தினிது சமன் குமார
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் : யூ.டி. நிஷாந்த ஜயவீர
வெகுசன ஊடக பிரதி அமைச்சர் : கௌசல்யா ஆரியரத்ன
வலுசக்தி பிரதி அமைச்சர் : எம்.ஐ.எம். அர்கம்
