கோட்டாவின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு
முன்னாள் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு விடுத்த கோரிக்கையை, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரி கோட்டாபய ராஜபக்ச இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், அவர் மீது இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளின் போது, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்; இருப்பினும், அந்தச் சமயத்தில் அவர் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருக்கவில்லை.
இந்த விண்ணப்பம் மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியபோது, கோட்டாபய ராஜபக்ச கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்பாக முன்னிலையாகியிருந்தார்.
அதேவேளை,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்றம் அடுத்த ஆண்டு மார்ச் 5ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு இன்று தீர்மானித்துள்ளது.
