தேவைப்படுவது வார்த்தைகளோ வாக்குறுதிகளோ அல்ல
செப்ரெம்பர் 8 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2024 ஒக்டோபர் 9ஆம் திகதி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும், A/HRC/57/L.1 என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானம், பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அனுசரணையுடன் முன்வைக்கப்பட்டது.
அனைத்துலக கண்காணிப்பு மற்றும் சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கான ஆதரவின் அவசியத்தை, இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.
சிறிலங்கா அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை நிராகரித்தது, வெளிப்புற பொறிமுறையைக் கண்டித்தது, மற்றும் உள்ளூர் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
2013 ஆம் ஆண்டு, ஜே.வி.பி (தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மூத்த பங்காளியாக உள்ளது) அனைத்து ‘இலங்கையர்களையும்’ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும், 2012 மற்றும் மார்ச் 2013 இல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், முற்றிலுமாக நிராகரிக்குமாறு அழைப்பு விடுத்தது.
அப்போது கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருந்த, அமைச்சர் கே.டி. லால்காந்த
“… ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அதன் 19 வது அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பேரவையின் 22 வது அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் வழங்கப்பட்ட அறிக்கை, 22 வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியன, சிறிலங்கா மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.” என அப்போது கூறினார்.
காலம் கடந்து, இப்போது நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்கும்போது, ஜே.வி.பி மெதுவாக, ஆனால் நிச்சயமாக அதன் தொனியை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயல்முறைக்கு விரோதமான நிலைப்பாட்டை எடுக்காது என்று, 2025 செப்ரெம்பர் 2 ஆம் திகதி வெளியான ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டது.
இது நல்லது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் ஆரம்பகால கடுமையான நிலைப்பாட்டை மாற்றியதற்காக பாராட்டப்பட வேண்டும்.
உண்மை என்னவென்றால், தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் இறந்தனர்.
பழமைவாத மதிப்பீடுகளின்படி, போரின் இறுதிக் கட்டத்தில் குறைந்தது 40,000 தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இனப் போரின் போது ஒரு தமிழ் பொதுமக்கள் கூட இறக்கவில்லை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புச் செயலாளர், கூறிய கூற்றுகளிலிருந்து இது ஒரு பெரிய மாற்றமாகும்.
அதிபர் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதிலிருந்து, சிறிலங்காவின் வடக்குத் தமிழ் பிராந்தியத்தில் பருத்தித்துறையில் உள்ள தனது முகாமை மூட சிறிலங்கா இராணுவம் உத்தரவிட்டது.
சிறிலங்கா இராணுவத் தலைமையகம், முகாம் மூடப்பட்டு, நிலம் இரண்டு வாரங்களுக்குள் அதன் உண்மையான உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் (செப்ரெம்பர் 1) யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது, போரின் போது, பாதுகாப்புப் படையினருக்காக கைப்பற்றப்பட்ட வடக்கில் உள்ள ஒவ்வொரு நிலமும் மக்களுக்கு விடுவிக்கப்படும் என்றுஅனுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.
துரதிர்ஷ்டவசமாக, எமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், ஐ.நா மனித உரிமைகள் பேரைவைக் கூட்டங்களுக்கு முன்னர், காணிகளை விடுவித்தல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல் போன்ற, வாக்குறுதிகளை வழங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் –
2023 இல் சித்தாண்டி பகுதியிலும் 2017 இல் மயிலிட்டியிலும் சில காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புகள், காணிகளை விடுவிப்பது மெதுவாகவும் பொதுவாக துண்டு துண்டாகவும் இருப்பதாகக் கூறுகின்றன.
அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் வடக்கு மக்கள் ஜேவிபிக்கு பெருமளவில் வாக்களித்தனர்.
அதிபர் திசாநாயக்க, இப்போது வடக்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, நடைமுறையில் நிறைவேற்ற வேண்டும்.
அதிபர் மற்றும் பொதுத் தேர்தல்களில் அவர்கள், அவர் மீது வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
அமெரிக்க தூதரக அறிக்கையில்,14 தமிழ் கைதிகள் இன்னும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் தாய்மார்கள், ஏராளமான மகன்கள், மகள்கள், தந்தைகள் மற்றும் தாய்மார்கள் பற்றிய தகவல்களைக் கோரி, தங்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்கின்றனர்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளா விட்டால், தமிழ் சமூகத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பிளவு முடிவுக்கு வராது.
சிறு குழந்தைகளும் சிரிக்கும் அதிபரும் நிறைந்த அறைகளில், எவ்வளவு புகைப்படக் காட்சிகள் எடுக்கப்பட்டாலும், களத்தில் உறுதியான நடவடிக்கைக்கு அவை மாற்றாக இருக்க முடியாது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த மாத இறுதியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, செப்ரெம்பர் அமர்வில் சிறிலங்காவின் மீது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது அரசாங்கத்தின் கூற்றுக்கள் நீடித்திருக்காது.
இப்போது, தேவைப்படுவது களத்தில் உறுதியான நடவடிக்கைளே தவிர, வெறும் வார்த்தைகளோ வாக்குறுதிகளோ அல்ல.
வழிமூலம் – டெய்லி மிரர்
தமிழில் – கார்வண்ணன்