ஐ.நா அறிக்கை குறித்து சட்டமா அதிபர் ஆழ்ந்த அதிருப்தி
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பாக, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்சேவைச் சந்தித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்து தொடர்பாக சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வாரம் நடந்த ஐ.நா வதிவிடப் பிரதிநிதியுடனான, சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் உள்ளடக்கங்களை பாரிந்த ரணசிங்க மறுத்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்த அவரது அறிக்கைக்கான பதில், அடுத்த வாரம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் அறிக்கையில் உள்ள அவதானிப்புகளுக்கு அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பதிலின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, சிறிலங்கா அரசாங்கம் ஒரு சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவதற்கான அதன் உறுதிப்பாட்டைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதாக, கொழும்புக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்சே தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீதி அமைப்பு எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அந்த அறிக்கை குறிப்பிடுவதாகவும், சட்டமா அதிபர் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
