ஜெனிவா செல்ல முன் இராஜதந்திரிகளை சந்திக்கிறார் விஜித ஹேரத்
ஜெனிவாவுக்குச் செல்வதற்கு முன்னர், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
செப்ரெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், 60ஆவது கூட்டத்தொடரில், கலந்து கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா செல்லவுள்ளார்.
அதற்கு முன்னதாக, கடந்த ஆண்டில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர் கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
கடந்த செப்ரெம்பரில் புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், உள்நாட்டு பொறுப்பை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கவே இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை அமைத்தல் ஆகியவையும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் கடந்த கால மனித உரிமை மீறல்களை விசாரிப்பதில், எந்தவொரு சர்வதேச தலையீட்டையும் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் மாறாமல் உள்ளது என்றும், மனித உரிமைகள் பேரவையில் தனது உரையின் போது இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உள்நாட்டு நிறுவனங்களை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவர் விரிவான விளக்கத்தை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.