செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 16 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக இன்று 16 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின், மூன்றாவது கட்டத்தின் இரண்டாவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.
இன்றைய அகழ்வின் போது, ஏற்கனவே தோண்டப்பட்ட அகழ்வாய்வுத் தளங்கள் விரிவுபடுத்தப்பட்டன.
இதன்போது புதிதாக 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சிறுவர்களுடையவை என்று நம்பப்படும் எலும்புக்கூடுகளும் உள்ளன. அத்துடன் ஆடை போன்ற தடயப் பொருளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 150 மனித எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.

