கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியில் இதுவரை 88 எலும்புக்கூடுகள்
கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் கூட்டு மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 88 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைத் தளம் அமைந்திருந்த உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இந்தப் புதைகுழி அகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.
இங்குருகடே சந்தியில் இந்து கொழும்பு துறைமுகம் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது, பழைய கொழும்பு துறைமுக செயலக வளாகத்தில் 2024 ஜூலை 13 ஆம் திகதி மனித எலும்பு எச்சங்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.
அதையடுத்து, கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன திசாநாயக்கவின் மேற்பார்வையிலும், கூட்டுப் புதைகுழி அகழ்வில் தேசிய நிபுணரான தொல்பொருள் துறையின் மூத்த பேராசிரியர் ராஜ் சோமதேவவின் வழிகாட்டுதலிலும் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மருத்துவ மற்றும் விஞ்ஞான பரிசோதனைகள் சிறப்பு தடயவியல் மருத்துவர் சுனில் ஹேவகேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா முழுவதும் இதுவரை 17 கூட்டுப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் கூறியிருந்தார்.

