கொழும்பு துறைமுகத்தில் ஐ.நா ஆய்வுக்கப்பல்
ஐ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின் கொடியுடனான டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் என்ற கடல் சார் ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கப்பல் சிறிலங்காவின் கடற்பரப்பில் ஜூலை 15ஆம் திகதியில் இருந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஐ.நா உணவு விவசாய நிறுவனம், இந்தக் கப்பலை மடகஸ்காரில் ஆய்வில் ஈடுபடுத்த தீர்மானித்தது.
கடைசி நேரத்தில், 15 நாட்கள் மட்டும் சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வு செய்ய சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்த போதும் ஏற்கனவே தமது பணிகள் திட்டமிடப்பட்டு விட்டதாக இந்தக் கப்பல் சிறிலங்காவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் கொழும்புத் துறைமுகத்திற்கு தற்போது வந்துள்ளது. எனினும், இது சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் நோக்கி செல்லும் வழியில் விநியோகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள ஐ.நா ஆய்வுக் கப்பல், இன்று அல்லது நாளை பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுச் செல்லும் போது சிறிலங்காவின் இரண்டு விஞ்ஞானிகளையும் ஏற்றிச் செல்லவுள்ளது.
அதேவேளை இந்தக் கப்பலை சிறிலங்காவில் ஆய்வில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கத்தினால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்திருப்பதாகவும், கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
