3 தமிழ் இளைஞர்களை தேடுகிறது பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு
வடக்கைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை தேடுவதாக சிறிலங்கா காவல்துறையின், பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு (CTID) அறிவித்துள்ளது.
வவுனியா, நேரியகுளம், காந்தி நகரைச் சேர்ந்த ஜீவராசா சுஜீபன் (வயது 30), செட்டிகுளம், மாணிக்கம் பண்ணை, மூன்றாம் கட்டத்தைச் சேர்ந்த இளங்கோ இசைவிந்தன் (வயது 27), வட்டுக்கோட்டை, அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் யோகராசா (வயது 27) ஆகியோரையே தேடி வருவதாக பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 21ஆம் திகதி கிரிபத்கொடை காவல்துறையினர் ரி-56 துப்பாக்கியுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவு கைக்குண்டுகளுடன் ஒரு சந்தேக நபரைக் கைது செய்தது.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைக்குண்டுகளுடன் மற்றொரு சந்தேக நபர் இருப்பதும், தொடர்புடைய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மூன்று சந்தேக நபர்களும் வவுனியாவை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும், அவர்களைத் தேடி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
