முத்தையன்கட்டு இளைஞன் மரணம்- 2 இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்
முல்லைத்தீவு- முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக- கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் இருவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முத்தையன்கட்டு இராணுவ முகாம் படையினரால் பழைய இரும்புப் பொருட்கள் இருப்பதாக அழைக்கப்பட்ட இளைஞர்கள், சிறிலங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் காணாமல் போன 32 வயதுடைய எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளைஞன் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, மறுநாள் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் தெவிரன்லகே சானக சம்பத் சமன்குமார, கோப்ரல், நாமல் குமாரசிறி வணிகரத்ன, கோப்ரல் ஜெயசிங்க பேலியகெதர லசந்த சந்திர சிறி ஆகிய, மூன்று பேரும், கைது செய்யப்பட்டு, 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அதேவேளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இளைஞர்களைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் லான்ஸ் கோப்ரல் தர அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நான்கு பேரும் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, சந்தேக நபர்களான சிறிலங்கா இராணுவத்தினர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்ட போது, அவர்களின் இரண்டு பேரை சாட்சிகள் சரியாக இனம்காட்டியுள்ளனர்.
