ரில்வினின் சர்ச்சைக்குரிய கருத்து – சீனா மௌனமாக இருப்பது ஏன்?
எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க படுகொலைக்குப் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்கவை அரசியலுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர், ஹென்பிடகெதர ஞானசீக தேரர் என்ற பௌத்த பிக்கு ஆவார்.
பின்னர், அவர் சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.
1960 முதல் 1965 வரையிலான, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தின் போது, அந்த பௌத்த பிக்கு ஒரு புத்தகத்தை எழுதினார்.
சிறிலங்கா சர்வாதிகார ஆட்சிக்கு செல்ல வேண்டும் என்று அந்தப் புத்தகம் கூறியது. இந்த நூல், எதிர்க்கட்சிகளை குழப்பத்துக்கு உள்ளாக்கியது.
சீனப் பிரதமர் சூ என்லாய் (Zhou Enlai) அந்தக் காலகட்டத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை சீனாவின் பரிசாக வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்த நேரத்தில், சிறிலங்காவுக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றன.
ஞானசீக தேரருக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்பு, பௌத்த பிக்குவின் நூல், சீனப் பிரதமரின் வருகை என்பன, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளை கவலையடையச் செய்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறிலங்கா அரசாங்க சார்பு துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு அனுப்புவதில் ஈடுபட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவின.
சிறிலங்காவில் உள்ள சீனத் தூதரகம் முன்பாக, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது.
இதேபோல், அந்த நேரத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறைக்குப் பின்னால் சீனா இருப்பதாகக் குற்றம்சாட்டியது.
1963 ஜூலையில் சீனாவுடன் கடல்சார் உடன்பாட்டில், கையெழுத்திட்ட போது இந்தியாவும் பதற்றமாக இருந்தது.
இது சிறிமாவோ பண்டாரநாயக்க, திருகோணமலை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பதாக ஐ.தே.க. குற்றம்சாட்ட வழிவகுத்தது.
சீனாவைப் போலவே, ஒரு சர்வாதிகார சிவப்பு அரசாங்கத்தை அவர் உருவாக்கப் போவதாக எதிர்க்கட்சி பிரச்சாரம் செய்தது.
இது மகாநாயக்க தேரர்களையும் பிக்குகளையும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்க வழிவகுத்தது.
ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் காரணமாக,இந்தக் கடந்த கால சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவர் சீனாவுக்குச் சென்று சீனத் தலைவர்களைச் சந்தித்தபோது, சிறிலங்காவை அபிவிருத்தி செய்வதற்கு ஜே.வி.பி அரசாங்கம், இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று, அவர்கள் தன்னிடம் கூறியதாக ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் ஏழு சக்திவாய்ந்த உறுப்பினர்களில் ஒருவரை ரில்வின் சில்வா சந்தித்தார்.
சீனாவின் கருத்தை ரில்வின் பகிரங்கமாக கூறியது, சீனாவுடன் நெருக்கமாக இருந்து கொண்டே, சிறிலங்கா ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்க வேண்டும் என்று கூறும் ஹென்பிடகெதர ஞானசீக தேரரின் புத்தகத்தைப் போன்றது.
சீனாவின் ஒப்புதலுடன் ரில்வின் ஒரு இரகசிய கலந்துரையாடலை பகிரங்கப்படுத்தினாரா என்பது தெரியவில்லை.
ரில்வினின் அறிக்கையால் சிறிலங்கா மக்கள் சீனாவைப் பற்றி தவறான கருத்தை உருவாக்கக் கூடும்.
ஜேவிபி அரசாங்கம், சிறிலங்காவில், 15 அல்லது 20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது என்பதை இது குறிக்கலாம்.
ஆனால், ரில்வினின் அறிக்கையை திருத்த வேண்டிய சீனாவின் பொறுப்பாகும்.
ஆங்கில மூலம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ