முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மரணம்
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
57 வயதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறிது காலமாக கடுமையான கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு நிமோனியா தொற்று ஏற்பட்டு , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில், பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் அனுருத்த ரத்வத்தவின் புதல்வரான லொஹான் ரத்வத்த, 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, கண்டி மாவட்டத்தில் இருந்து முதல்முறையாக நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
ராஜபக்சவினரின் தீவிர விசுவாசியான அவர் முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் பின்னர் பொதுஜன பெரமுனவிலும் அங்கம் வகித்திருந்தார்.
அதேவேளை, 2001 பொதுத் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று கண்டி உலதலவின்னவில் 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை சம்பவம், சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த போது, அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி முழந்தாளிட வைத்தது, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்.
அனுர அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சட்டவிரோதமாக வாகனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.